Thursday, 23 September 2010

தூரிகை

வரைந்து முடித்தாயிற்றா?

சரி
இனி தூரிகையை
நன்றாகக் கழுவிவிடு

அதன் மிருதுவான தூவிகளுக்கு
சேதம் விளையாதபடி
வெகு மென்மையாய்
வருடிக் கழுவிவிடு

கவனம்,
கழுவப்படாத வர்ணங்கள்
தூரிகையைக் கெடுத்துவிடும்

சுத்தமாய் கழுவிய
உன் தூரிகையை
அதன் தீட்சண்யமான முனை
பூமியில் புரண்டு
பழுதுபட்டு விடாதபடி
எப்போதும் மேல் நோக்கிய
வெளியில் இருக்க
இப்படி பொட்டு வை
ஒரு குவளையில்

-தேவதேவன்

ஒரு மரத்தைக் கூட காண முடியவில்லை

ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாக நிற்கவைத்துவிட்டுப்
போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்கமாட்டேன் என்கிறது
மேலும்
மரத்தடியில் நீ நிற்கையில் தான்
ரொம்ப அழகாயிருக்கிறாய் !

கர்பிணிப் பெண்ணை
அவள் தாயிடம் சேர்பதுபோல
உன்னை ஒரு மரநிழலில்
விட்டுப் போக விழைகிறேன்.
மரங்களின் தாய்மை
முளை முலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளில் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையைக் கோதும்

மரம் உனக்கு பார்வைகளை அறிமுகப்படுத்தும்
அந்தப் பறவைகள் வானத்தையும் தீவுகளையும்.
வானமோ
அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே !

ஒரு மரத்தடி நிழல் தேவை.
உன்னைத் தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப்
போவேன்.
-தேவதேவன்